களஞ்சியம்
< All Topics
Print

அறிமுகம் – 300 எளிய குறள்கள்

திருக்குறள் படித்தல் (ஒரே நாளில் 300 திருக்குறளை அறிதல்)

அனைவருக்கும், வணக்கம்.

ஒவ்வொரு திருக்குறளிலும் மிகக் குறைந்த சொற்களே (6-10) உள்ளன.

அவை திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் மக்களின் பயன்பாட்டில் இருந்த சொற்களே.

திருக்குறள் எழுதப்பட்டு 2000 ஆண்டுகளுக்கு மேலானதால் சொற்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் திரிந்து வேறுபட்டு, இப்பொழுது உரை எழுதிப் படிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

திருக்குறள் “குறள்வெண்பா” வகையில் எழுதப் பட்டுள்ளது. எனவே பாக்கள் அனைத்தும் 7 சீர்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. சீர் அமைப்பிற்கு ஏற்பச் சொற்களை இணைத்தும், இசைக்காகச் சொற்களைக் கூட்டியும்
அமைக்கப்பட்டுள்ளன. சில பாக்களில் சொற்கள் முன் பின்னாக வெட்டி ஒட்டி இணைக்கப்பட்டுள்ளன. இவை திருவள்ளுவரது புலமையின் நுட்பத்தையும் ஆழத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

வீடு அழகாகவும், ஒழுங்காகவும், வாழ்முறைக்கு ஏற்றதாகவும், பாதுகாப்பாகவும், பலரும் வியந்து போற்றுவதற்கு உரியதாகவும் இருப்பதற்காகக் கட்டடக்கலைஞர் செங்கற்களால், ஓர் ஒழுங்கமைவு முறையில் வீட்டைக் கட்டுவதுபோல, திருக்குறள் மிகச் சரியான சொற்களைக் கொண்டு ஓர் ஒழுங்கமைவு முறையில் அனைவரும் வியந்து போற்றி எந்தக்காலத்திலும் பின்பற்றும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கற்றல் என்பது படித்து உணருகிற செயல்தான். உணர்ந்து, உள்வாங்கி, அதன்வழி வாழ்முறைகளை ஆக்கிக் கொள்ளுகிற உயரிய படிநிலைதான். ஆனால் இன்றைய கற்றல் என்பது மதிப்பெண்களுக்குள் சுருங்கிப்போய்க் கிடக்கிறது. இவ்வாறே திருக்குறளும் அதே நிலையிலேயே புறந்தள்ளப்பட்டுள்ளது.

திருக்குறளை ஒவ்வொருவரும் படிப்பது என்பது அவரது மகிழ்வான, போற்றுதலுக்குரிய, இறந்தாலும் பேசப்படுகிற, உயரிய வாழ்முறைக்கான கைவிளக்குகளைக் கண்டறிவதற்காகத்தான்.

1330 விளக்குகளைத் திருவள்ளுவர் உருவாக்கி, அவற்றை 133 பெட்டிகளில் வைத்துள்ளார்.

ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் தனக்கான ஒரு விளக்கைப் படித்து அறிந்து, தனக்குள் ஏற்றி வைத்துக்கொண்டு தனது வாழ்க்கைப் பாதையில், மகிழ்வோடு இறுதிக்காலம் வரை தொடர இயலும்.

2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருவள்ளுவர், தம் காலத்து மக்களிடையே கண்டறிந்த பண்புகளின் அடிப்படையில், தன்னுள் எழுந்த, பின்பற்றக்கூடிய, வாழ்வியலின் ஒழுகலாறுகளை, வரிசைப்படுத்தி, குறட்பாக்களாகப் பதிவு செய்துள்ளார். இந்த ஒழுகலாறுகள் உலக மாந்தர்கள் அனைவரும் கண்டு, உணர்ந்து, பின்பற்ற வேண்டிய ஒழுகலாறுகளே. நாடு, இனம், மொழி கடந்து உலகில் மகிழ்வாக வாழ விரும்பும் ஒவ்வொரு மாந்தரும் படித்து உணருவதற்காகவே இப் பாக்கள் படைக்கப்பட்டுள்ளன.

திருக்குறளைப் படித்து, உணர்ந்து, உள்வாங்கும் பொழுது, திருவள்ளுவர் காட்டுகிற ஒழுகலாறுகளை மாந்தர்கள் தங்களுக்குள் வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த உலகில் பிறந்த ஒவ்வோர் உயிரியும் மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறது.

பல்வேறு புறச்சூழல்களில் சிக்கித் தவித்து, அகத்தை நெறிப்படுத்த இயலாது, கலங்கி, உழன்று, இறுதிவரை துன்பச்சேற்றிலேயே மூழ்கி மூழ்கி, மாண்டு போகின்றனர்.

மகிழ்வாக வாழ அகமும், புறமும் நெறிப்படுத்தப்பட வேண்டும். இதுதான் பண்டைய தமிழர் கண்ட வாழ்முறை. அந்த வாழ்முறைக்கான பண்புக்கூறுகளை வரிசைப் படுத்துவதே திருக்குறளின் நோக்கம்.

ஒவ்வொரு திருக்குறளையும் படிக்கும்பொழுது இந்த நினைவுகளுடனேயே படிக்கவும். ஒவ்வொரு குறளையும் ஒவ்வொரு வாழ்முறையாக உங்களுக்குள் பதிய வைத்துக் கொள்ளவும்.

இது உங்களுக்கு,

பிற உயிர்களிடத்து அன்பு காட்டவும்,
பிறர் வியந்து போற்றும்படி வாழவும்,
வாழும் ஒவ்வொரு நாளும் பயனுள்ளதாக அமைத்துக் கொள்ளவும்,

வழி அமைக்கும்.

எனவேதான் உலகமக்கள் திருக்குறளை எளிமையாக யாருடைய உதவியும் இல்லாமல் தாங்களாகவே படித்துப் புரிந்து கொண்டு, தங்கள் வாழ்முறையைச் செப்பமாக அமைத்துக் கொள்வதற்காக இந்தத் திருக்குறள் படித்தல் பயிற்சியினை எளிமையாக்கி வடிவமைத்துள்ளேன்.

1330 குறள்களில் தொடக்க நிலையாகத் தாங்களாகவே எளிமையாகப் படித்து உணரக்கூடிய 303 குறள்களை வரிசைப்படுத்தி இத்துடன் இணைத்துள்ளேன். இரண்டாவதாக 500, மூன்றாவதாக 527 குறள்களையும் வரிசைப்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தொடக்க நிலையில் இரண்டு படிகள் உள்ளன.

படி 1 இல் ஒவ்வொருவரும் தாங்களாகவே படித்து உணரக்கூடிய 26 திருக்குறள்களும், படி 2 இல் புரியாத சில சொற்களுக்கான பொருளை தட்டச்சு செய்தும் இணைத்துள்ளேன். கீழ்க்காணும் படிநிலைகளில் நீங்கள் படிக்கும் ஒவ்வொரு திருக்குறளையும் படித்து நெஞ்சில் நிறுத்தவும்.

1. ஒவ்வொரு குறளையும் தனித் தனிச் சொல்லாகப் படிக்கவும்.
2. தனித் தனிச் சொல்லுக்கான பொருளை உங்களுக்குள் உணரவும்.
3. பிறகு சொற்களுக்கான பொருளை ஒன்றாக இணைத்துப் பார்க்கவும்.
4. உங்கள் சொந்த நடையில் நீங்கள் உணர்ந்ததை வரிசைப்படுத்தவும்.
5. உங்களது புரிதலை, உங்கள் வாழ்வில் கண்ட நிகழ்வுகளோடு பொருத்திப் பார்க்கவும்.
6. உங்களது இந்தப் புரிதலை இணைத்துக் கதைபோல அடுத்தவருக்குச் சொல்லவும்.
7. ப்பொழுது நீங்கள் படித்த திருக்குறள் உங்களுக்குள் பதிந்துவிடும்.
8. பதிந்த திருக்குறளை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தத் தொடங்குங்கள்.

அன்புடன்,
பொள்ளாச்சி நசன், தமிழம் வலை
http://www.thamizham.net
pollachinasan@gmail.com
mobile: 97 88 55 20 61

Table of Contents
Scroll to Top